இடப்பொருத்தம் கருதி, பாரதி பாடல்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்குவதற்காக நடைபெற்ற போராட்டங்களை விரிவாக எழுதவில்லை.  நான் குறித்திருப்பது ஒரு சிறு துளியே.  தஞ்சை குடவாசல் புதுக்குடியில் சாமி உடையார் என்றொருவர் இருந்தாராம்.   தடை விதிக்கப்பட்டிருந்த பாரதி பாடல்கள் அவருடைய நண்பர்களுக்கு மத்தியிலாவது பரவ வேண்டும் என்பதற்காக ஒரு காரியம் செய்தார்.  தினமும் ஒரு பாரதி பாடலையாவது ஒரு காகிதத்தில் எழுதி வைத்துக் கொள்வார்.  அப்படித் தயாரான காகிதங்களின் மற்றொரு புறத்தில் நண்பர்களுக்குக் கடிதங்கள் எழுதுவாராம்.  தடை விதிக்கப்பட்ட பாரதி பாடல்கள் பரவுவதற்கு இப்படியும் ஒரு வழி! “சுப்பிரமணிய பாரதி திருவடிகள் வெல்க” என்றுதான் கடிதங்களை முடிப்பாராம்.  அப்படி ஒரு தேவதா விசுவாசம்.

இன்றைக்கு நூற்றுக் கணக்கான பதிப்பகத்தார்கள் பாரதி கவிதைத் தொகுப்புகளை வெளியிடுகிறார்கள்.  எந்தப் புத்தகக் கண்காட்சிக்குப் போனாலும் ஒவ்வொரு கடையிலும் இரண்டு நூல்களைத் தவறாமல் பார்க்கலாம்.  ஒன்று திருக்குறள்.  மற்றது பாரதி பாடல்கள்.  ஆனால், அந்த நாட்களில் பாரதி பாடல்களை மக்களிடம் கொண்டு செல்ல மிகவும் சிரமப் பட்டிருக்கிறார்கள்.

1924ஆம் வருடம் பாரதி நூல் பிரதிகளை விற்றுத் தரும் பணியை ஹரிஹர சர்மாவிடம் ஒப்படைத்தனர்.  சர்மா பல ஆண்டுகள் இந்தியா பத்திரிகையில் உழைத்தவர்.  பாரதிக்கு ஒருவிதத்தில் சொந்தக்காரர் என்று ரா. அ. பத்மநாபன் சொல்கிறார்.

பாரதி குடும்பத்தார் அவருடைய நூல்களின் உரிமையை நான்காயிரம் ரூபாய்க்குப் பாரதி பிரசுராலயத்திற்கு விற்று சகுந்தலா பாரதியின் திருமணக் கடனை அடைத்தனர் என்று ரா. அ. பத்மநாபன் சொல்கிறார்.  பாரதி பிரசுராலயம் ஹரிஹர சர்மா மற்றும் பாரதியாரின் சகோதரர் சி. விசுவநாதன் ஆகியோரால் நடத்தப்பட்டது.  இவர்களின் புத்தகப் பதிப்புப் பணிகளைப் பற்றி அதிருப்தி தெரிவிக்கிறார் பரலி சு. நெல்லையப்பர்.  பக்கத்திற்குப் பக்கம் பிழை மலிந்த பதிப்புகளாய் வந்தன என்கிறார்.  1941ல் ஹரிஹர சர்மா விலகிக்கொண்டார்.

1931ல் பாரதி பாடல்களை ஒலிப்பதிவு செய்யும் உரிமையை ஏவிஎம் ரூ.400 கொடுத்து வாங்கிக்கொண்டார் என்கிறார் ரா. அ. பத்மநாபன்.  அதாவது, பாடல்களை ஏவிஎம் நடத்தி வந்த ஸரஸ்வதி ஸ்டோர்ஸ் வெளியிட்டு வந்த ‘பிராட்காஸ்ட்’ ரிகார்டுகளுக்காக ஒலிப்பதிவு செய்து விற்கும் உரிமை.  இது வாங்கப்பட்டது இந்தக் கதையை மட்டும்தான் இப்போது தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

ரா. அ. பத்மநாபன் இப்படிச் சொல்கிறார்.  எதிரொலி விசுவநாதன் வேறு மாதிரி சொல்கிறார்.  இங்கே எதிரொலி விசுவநாதனைப் பற்றி ஒரு வார்த்தை சொல்ல வேண்டும்.  இவர் தமிழக அரசால் பாரதி விருது நிறுவப்பட்ட முதல் ஆண்டு அந்த விருதைப் பெற்ற கவிமாமணி மதிவண்ணனின் மூத்த சகோதரர்.  அதைவிடவும் முக்கியமானது என்னவென்றால் பாரதியால் ‘தம்பி’ என்று அன்புடன் அழைக்கப்பட்ட பரலி சு. நெல்லையப்பரின் சீடர்.  நெல்லையப்பர் பாரதி வாழ்ந்த காலத்திலேயே அவருடைய பாடல்களை வெளியிட்டவர்.  சென்னை குரோம்பேட்டையில் நெல்லையய்பரும், விசுவநாதனும் ஒன்றாய் வசித்தவர்கள்.  பரலியிடமிருந்து நேரடியாகப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் எதிரொலி விசுவநாதன் சொல்வது இது.

பாரதி பிரசுராலயம் ஹரிஹர சர்மா, சகுந்தலா பாரதியின் கணவர் நடராஜன், பாரதியின் தம்பியான சி. விசுவநாத ஐயர் ஆகிய மூவரால் ஆரம்பிக்கப் பட்டது.  ‘1941ல் ஹரிஹர சர்மா விலகிக் கொண்டார்.  அதன் பிறகு பாரதி பிரசுராலயம் விசுவநாத ஐயரின் நேரடி மேற்பார்வையில் நடத்தப் பட்டது.

காலம் குறிக்காமல் இந்தத் தகவல் சொல்லப்பட்டிருக்கிறது.  எழுதியிருப்பதை வைத்துப் பார்த்தால் 1941ல் ஹரிஹர சர்மா விலகிய பிறகு நடந்த நிகழ்ச்சி போல இது தோன்றுகிறது.  1944ல் பாரதி பாடல்கள் தனியார் கையிலிருந்து மீட்கப்பட வேண்டும் என்ற எதிர்ப்புக் குரல் முதல் முறையாக ஒலிக்கத் தொடங்கியிருந்தது.  ஆகவே, எதிரொலி விசுவநாதன் சொல்வதன்படி 1941க்கும் 1944க்கும் இடைப்பட்ட காலத்தில் விசுவநாத ஐயர் ஒரு காரியத்தைச் செய்தார்.  ஏனிவ்வாறு செய்தார் என்பதற்கு எங்கும் விளக்கம் கிடைக்கவில்லை.  நெல்லையப்பரின் வார்த்தைகளை வைத்துப் பார்க்கும் போது விசுவநாதர் வியாபார நோக்குள்ளவராகத் தெரிகிறார்.  மற்ற பல பாரதி எழுத்தாளர்களின் பார்வையில் வேறு மாதிரி தெரிகிறார்.  அதை ஆராய்வது இப்போதைய நோக்கமன்று.

விசுவாநாத ஐயர் ஒரு மார்வாடி கம்பெனிக்கு, பாரதி பாடல்களை திரைப்படங்களிலும் நாடகங்களிலும் பாடுவதற்கான உரிமையை ஒரு மார்வாடிக் கம்பெனிக்கு விற்றுவிட்டார்.  அவரிடமிருந்து ஏவிஎம் அதிகப் பணம் கொடுத்து வாங்கிக்கொண்டார்.  ஒருவிதத்தில் பார்க்கும் போது இது பரவாயில்லை என்று கூடத் தோன்றுகிறது.  தமிழனை மார்வாடி கொள்ளையடிக்க விடவில்லை என்றெல்லாம் ஆராய்ச்சியாளர்கள் திருப்திப்பட்டுக் கொள்கிறார்கள்.  கொள்ளையடிப்பது என்றான பிறகு தமிழனென்ன மார்வாடி என்ன?

1922ல் வெளிவந்த சுதேச கீதங்கள் முதற்பாகத்திற்கு செல்லம்மா ஒரு முன்னுரை எழுதியிருக்கிறார்.  அதில் அவர் குறித்திருப்பது “பாரதியாரின் நூல்கள் முழுமையும் அச்சிட்டு வெளியிடும் பொறுப்பை என் ஜீவன் இருக்கும்வரை நான் வகித்து, பிற்பாடு தமிழ்நாட்டிற்குத் தத்தம் செய்துவிட்டுப் போகத் தீர்மானித்திருக்கிறேன்.”  இப்படி எழுதியவரை, தொடர்ந்து அவ்வாறு செய்ய முடியாதபடித் திருமணக் கடன் வந்து நின்றது.  அவர் பாரதி பிரசுராலயத்தை நம்பி ஒப்படைத்தார்.  ஆனால், விசுவநாத ஐயர் செய்தது மடத்தனத்தின் உச்சம்.

ஏவிஎம் அவர்கள் பாரதி பாடல்களைப் பயன்படுத்திக்கொள்ள கட்டணம் விதித்தார்.  ஒரு பாடல் 20 அடிகளுக்குக் குறைந்து இருக்குமாயின் ரூ.5/- கட்டணம்.  அதற்கு மேற்பட்டால் ஒரு அடிக்கு நான்கணா.  இது பத்திரிகைகளுக்கு.  நாடகம் மற்றும் திரைப்படங்களுக்கு உபயோகிக்க அதிகக் கட்டணம்.

எதிரொலி விசுவநாதன் இந்த இடத்தில் சொல்லியிருப்பதை அப்படியே தருகிறேன்.

“பாரதி பிரசுராலயத்தின் அந்தச் செய்கைகள், பாரதி பாடல் பற்றி அப்போது இருந்த நிலைமைகள் தமிழ்நாட்டில் முக்கியமான சில பத்திரிகை ஆசிரியர்கள், அரசியல் தலைவர்கள் இவர்களுக்கு மட்டுமே தெரிந்தன.  அவர்கள் அந்நிலைமையை மீறிச் செயல்படாமல் பாரதி பாடல்களைத் தங்கள் பத்திரிகைகளில் அவசியம் ஏற்படும் போது அனுமதி பெற்று அதற்குரிய கட்டணம் செலுத்தியே வெளியிட்டு வந்தார்கள்.  அந்நிலையை மாற்றிப் பாரதி பாடல்கள் நாட்டின் பொதுவுடைமையாக்கப்பட வேண்டும் என்ற கருத்துகள் ஒரு சிலரால் எழுதப்பட்டும் யாதொரு பயனுமின்றிப் போயின.”

யாருடைய பாடலுக்கு யார் வரி வசூலிப்பது?  அதனால் யார் நன்மை பெற்றார்கள்?  இந்தக் கேள்விகள் தமிழறிஞர்கள் மத்தியில் எழாமலில்லை.  1944ஆம் ஆண்டு, முதல் தமிழ் எழுத்தாளர் மாநாடு கோவையில் நடந்தது.  அவெரா கிருஷ்ணசாமி ரெட்டியார் தனியார் கையிலிருந்து பாரதி பாடல்கள் மீட்கப்படவேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டுவந்தார்.  அவ்வை டி.கே. சண்முகம், எழுத்தாளர் நாரண. துரைக்கண்ணன் (ஜீவா) கம்யூனிஸ்ட் தலைவர் ப. ஜீவானந்தம் ஆகியோர் இந்தக் கருத்தை வலியுறுத்தினர்.

1947ல் பாரதி மணிமண்டபத் திறப்பு விழாவின் போது சிலம்புச் செல்வர் மபொசி அவர்கள் பேசுகையில் பாரதி பாடல்கள் பொதுவுடமையாக்கப் பட்டாலன்றி அவற்றை மக்கள் முழு அளவில் பயன்படுத்திக் கொள்ள முடியாது என்று பேசினார். எதிரொலி விசுவநாதன் சொல்லும் ஒரு விஷயம் மிகவும் உறுத்துகிறது.

“மணிமண்டபத் திறப்பு விழாவிற்காகப் பாரதி சிறப்பு மலர் போட்ட பத்திரிகைகள் பாரதி பாடல்களை உரிமை பெற்றவரின் அனுமதியோடு வெளியிட்ட கையாலாகத்தனம் வெட்ட வெளிச்சமாக்கப்பட்டது.”   உரிமை பெற்றவரின் அனுமதி என்றால் என்ன என்பதை விவரிக்க வேண்டியது இல்லை.  பாரதி பாடல்களைப் பிரசுரிக்க வேண்டுமானால் ஏவிஎம் அனுமதி இல்லாமல் பிரசுரிக்க முடியாது என்ற நிலை இருந்திருக்கிறது.  பாரதி மணி மண்டபத் திறப்பு விழாவிற்காக வெளியிடப்பட்ட சிறப்பு மலரில் பாரதி பாடல்களை வெளியிட வேண்டுமானாலும் அவருடைய அனுமதி தேவைப்பட்டது என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.  இதற்கும் வரி வசூல் இருந்தது என்ற அபிப்பிராயமும் இருக்கிறது.

மனத்தை உறுத்தும் விஷயம் என்னவென்றால் இதைப் பற்றி யாருமே எழுதாமலிருப்பதுதான்.  பாரதிக்குப் பிறகு பாரதி கவிதைகள் என்று ஆய்ந்த ரா.அ.பத்மநாபன் கூட இதைப்பற்றி ஒரு வரி கூட, ஏன் ஓர் எழுத்து கூட மூச்சு விடாமல் இருக்கிறார்.

இந்தக் கூத்து நடந்து முடிந்தபின் இலக்கிய உலகம் கொஞ்சம் பரபரப்பானது.  எழுத்தாளர் நாரண. துரைக்கண்ணன் அவர்கள் பாரதி விடுதலைக் கழகம் என்றொரு அமைப்பை ஏற்படுத்தினார்.  இந்தக் கழகத்தின் முதற் கூட்டம் 11.3.1948 அன்று ச. து. சு. யோகியார் தலைமையில் நடந்தது.  சந்தா தேவையில்லை.  உறுப்பினராகுங்கள் என்று அறிக்கை வெளியிட்டார்கள்.  கழகத்தின் தலைவராக வ.ரா. தேர்ந்தெடுக்கப்பட்டார்.  துணைத் தலைவர்களாக நாரண. துரைக்கண்ணன், அ. சீனிவாச ராகவன் (அசீரா – நாணல்) ஆகியோரும், செயலாளர்களாக திருலோக சீதாராம் அவர்களும் வல்லிக்கண்ணனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பாரதி வரலாற்றுப் பதிவில் மட்டுமல்ல; பாரதி பாடல்களின் வரலாற்றுப் பதிவிலும் பலவிதமான பிழைகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட செய்திகளும் இருக்கின்றன.  ஏவிஎம் அவர்கள் இதில் நேரடியாகச் சம்பந்தப் பட்டவர்.  அவருடைய கட்சியை அவர் எடுத்து வைத்திருக்கிறார்.  அதை அடுத்த வாரம் பார்க்கலாம்.

License

Share This Book