பணம் எப்படிப்பட்ட நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தும் என்பதற்கு, பாரதி விடுதலைக் கழகத்தின் முதற் கூட்டம் முடிந்த பிறகு நடந்த சம்பவங்கள் எடுத்துக்காட்டாக விளங்கும்.  வ. ரா. பாண்டிச்சேரியில் அரவிந்தரைச் சந்திக்கப் போனார்.  பாரதியின் அடிமையானார்.  இவர் எழுதிய மகாகவி பாரதியார் என்ற புத்தகமே இவருடைய பாரதிப் பற்றுக்குச் சாட்சி.  பாரதி பாடல்கள் பெருமளவு பரவ இவரும் ஒரு காரணமாக இருந்தார்.  பாரதி விடுதலைக் கழகம் நிறுவப்பட்ட சமயத்தில் வ. ரா. அவர்களின் மணிவிழா நடந்தது.  அந்த விழாவுக்கு நிதியுதவி செய்வதற்குக் கல்கி முன்வந்திருந்தார்.  கல்கியோ ஏவிஎம் அவர்களின் பகைமையைச் சம்பாதித்துக்கொள்ள விரும்பாத – அல்லது முடியாத – நிலையில் இருந்தார்.  கல்கியின் திரையுலகத் தொடர்புகள் உலகறிந்த ரகசியம்.  எனவே, பாரதி விடுதலைக் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொள்ளவேண்டாம் என்று வ. ரா. அவர்களுக்குக் கல்கி சொன்னார்.  அல்லது கல்கி மூலம் வ.ராவுக்குச் சொல்லப்பட்டது.  வ.ரா. அவர்களின் நிலையைக் கழகத்தார் உணர்ந்தனர்.  எனவே தலைமைப் பொறுப்பு நாரண. துரைக்கண்ணன் அவர்களுக்குத் தரப்பட்டது. (‘பாரதிக்கு விடுதலை’ (பக்கம் 71-72) எதிரொலி விசுவநாதன்.)

பாரதியை ஒரு மகாகவி என்று ஏற்றுக்கொள்ளச் சிரமப்பட்டவர் கல்கி.  காரைக்குடியில் நடந்த ஓர் இலக்கியக் கூட்டத்தில் (1935) வ. ரா. அவர்கள் அயல் நாட்டுக் கவிஞர்களான கீட்ஸ், ஷெல்லி, ஷேக்ஸ்பியர் போன்றோரின் கவிதைகளெல்லாம் பாரதியின் கவிதைக்கு ஒப்பாக மாட்டாது என்று பேசினார்.

கல்கி இதற்கு ஒரு பதில் எழுதினார்.  தகுந்த காரணங்களைச் சொல்லாமல் ‘பாரதியை ஒரு நல்ல கவி என்று வேண்டுமானால் சொல்லலாம்.  மகாகவி என்று சொல்ல முடியாது.  எனக்கும் காவிரிதான் பிடிக்கும்.  அதற்காக அதனைக் கங்கையை விடப் பெரியது என்று சொல்ல முடியுமா?’ என்று குறிப்பிட்டார்.  ஆமாம், நல்ல பாம்பு என்பதைப் போல நல்ல கவி என்று சிலர் பகடி பேசினார்கள்.  மகாகவி, நல்லகவி விவாதம் தமிழ்நாட்டில் அமர்க்களப்பட்டது.  இந்தக் கறையைக் கழுவிக்கொள்ளத்தான் கல்கி பாரதி மணிமண்டபம் கட்டினார் என்று என்  பேராசியர் திரு வேணுகோபாலன் (நாகநந்தி) சொல்லக் கேட்டிருக்கிறேன்.

என் ஆசிரியர் நாகநந்தி, கல்கியால் பெரிதும் கவரப்பட்டவர்,  அவருடைய கதாபாத்திரத்தின் பெயரையே தனக்குப் புனைப்பெயராகச் சூட்டிக்கொண்டார்.  பார்த்திபன் என்று தன் மகனுக்கும் குந்தவை என்று தன் தமக்கை மகளுக்கும் அநிருத்தன் என்று தன் பெயரனுக்கும் கல்கியின் பாத்திரங்களாகவே பெயர் வைத்தவர்.  கல்கி ஆராய்ச்சிக்காக சுந்தா அவர்களை ஒருவர் அணுகியபோது ‘போய் அவரிடம் கேளுங்கள்.  அவரை விடவும் யாருக்கும் கல்கியைப் பற்றித் தெரியாது’ என்று அவரை அனுப்பிவைத்தார். எனவே என் ஆசிரியர் சொன்னது உண்மையாகத்தான் இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். டி. எஸ். சொக்கலிங்கம் அவர்கள் கூட எப்படி பி.ஸ்ரீ., கல்கி, ரசிகமணி டிகேசி போன்றோர் நல்ல கவி கட்சியிலிருந்து மாறினார்கள் என்று எழுதியிருப்பதாக எதிரொலி விசுவநாதன் சொல்கிறார்.

எனவே, கல்கியின் தலையீட்டால் தலைமைப் பொறுப்பு இடம் மாறியது.  நாரண. துரைக்கண்ணன் தலைமையில் தமிழ்நாடெங்கும் ஆதரவு தேடிச் சுற்றுப் பயணம் நடந்தது.  பொதுமக்களையும், காமராசர் போன்ற அரசியல் தலைவர்களையும் சந்தித்துப் பேசினர்.  திரைக்குப் பின்னே இருந்த பிரச்சினை தெருவுக்கு வந்தது. அதன் காரணமாக பாரதி பாடல்களைத் தனியார் கையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்ற எழுச்சி வலுக்க ஆரம்பித்தது.

டி.கே.எஸ் சகோதரர்கள் இந்த இயக்கத்துக்கு ஆதரவளித்தனர்.  பாரதி பாடல்களுக்குத் தடை இருந்த காலத்திலேயே அவர் பாடல்களைத் தங்களின் நாடகங்களில் பாடி வந்தவர்கள் அவர்கள்.  அப்படி நடத்தப்பட்ட நாடகங்களில் ஒன்று பில்ஹணன்.  இந்த நாடகத்தை 1948ஆம் ஆண்டு திரைப்படமாக எடுத்தார்கள்.  நாடகத்தில் பயன்படுத்திய பாரதி பாடல்களைத் திரைப்படத்திலும் பயன்படுத்தியிருந்தார்கள்.  மெய்யப்பருக்குப் பாடல் வரிகளுக்கான வரியைச் செலுத்தவில்லை.

எழுந்தார் மெய்யப்பர்.  பாரதி பாடல்களைத் தன் அனுமதியின்றி பயன்படுத்தியது குற்றம்.  எனவே, உடனடியாக படத்திலிருந்து அந்தப் பாடல்களை நீக்க வேண்டும் என்று அறிக்கை விட்டார்.  டி.கே.எஸ் சகோதரர்கள் அதற்கு, ‘பாரதியின் பாடல்கள் தமிழ்நாட்டின் பொதுச்சொத்து. அவற்றைப் பயன்படுத்த யாருக்கும் பணம் தரத் தேவையில்லை.  பாரதி பாடல்களுக்குத் தனி மனிதர் உரிமை பாராட்டுவதை ஒப்புக்கொள்ள முடியாது’ என்று பதிலறிக்கை தந்தனர்.

1948 ஏப்ரல் மாதம் டி.கே.எஸ் சகோதரர்கள் விடுத்த அறிக்கையைக் கீழே தருகிறேன்.

‘அன்பர்களே, மகாகவி பாரதியாருக்கு மண்டபம் கட்டி மகிழ்ந்தீர்கள்.  ஆண்டுதோறும் பாரதி திருநாளை கொண்டாடி வருகிறீர்கள்.  உங்கள் எண்ணம் நன்று.  ஆனால் நம் தமிழ்நாட்டிலேயே அப்பாடல்களுக்குத் தடை ஏற்பட்டுள்ள நிலையைக் கவனித்தீர்களா?  ஆங்கில சர்க்கார் முன்பு தடை விதித்தார்கள்.  இன்று தனிமனிதர் தடைவிதிக்கின்றார்.  பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேண்டிப் பராசக்தியைப் பாடிய கவிஞனின் பரந்த நோக்கத்தைக் குறுகிய வியாபார நோக்கங்கள் சிதைக்கின்றன.  தமிழ்நாட்டின் அமர கவியைச் சிலர் இரும்புப் பெட்டியில் பூட்டி வைத்து வியாபாரம் நடத்த முயலும் வேடிக்கையை நீங்கள் அனுமதிப்பது சரியா?  பாரதி பாடல்களைப் பாடவேண்டும் என்பது எங்கள் இதயத்திலிருந்து எழும் உணர்ச்சி.  இந்த உணர்ச்சிக்குத் தடையா?’

அதிரடியாக ஒரு காரியம் செய்தனர் டி.கே.எஸ் சகோதரர்கள்.  மெய்யப்பரின் அறிக்கையை அலட்சியம் செய்து பில்ஹணன் படத்தை, பாரதியின் பாடல்களுடன் வெளியிட்டனர்.  இதனால் சினமுற்ற மெய்யப்பர், டி.கே.எஸ் சகோதரர்கள் மீதும், படத்தைத் தயாரித்த சேலம் சண்முகா பிலிம்சாரின் மீதும் சி. பி. கோ.151ஆம் பிரிவு, சட்டம் 2, பகுதி 39ன் படி, கோவை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். பில்ஹணன் படத்தைத் திரையிடவோ பட்டுவாடா செய்யவோ கூடாதென்று அவர் கோரியிருந்தார்.

பரலி சு. நெல்லையப்பரின் சாட்சியமும், தீர்ப்பும் அடுத்த பகுதியில்.

License

Share This Book