பாரதி விடுதலைக் கழகத்தார் முதல்வர் ஓமந்தூர் ரெட்டியாரைச் சந்தித்து பாரதி பாடல்களை நாட்டுடமையாக்க வேண்டும் என்ற விண்ணப்பத்தை அளித்தார்கள்.  அப்படிச் செய்வதற்கு முன் பாரதியின் வாரிசுகளிடமிருந்து இதற்கான ஒப்புதல் கடிதத்தைப் பெறவேண்டும் என்று சொன்னார் ஓமந்தூரார்.  இந்தச் செய்தி டி. எஸ். சொக்கலிங்கம் அவர்கள் மூலமாக நாரண. துரைக்கண்ணனை அடைந்தது.  பாரதி குடும்பத்தாரை நன்கறிந்த பேராசிரியர் அ. சீனிவாச ராகவனுக்கு உடனே தந்தி கொடுத்து வரவழைத்தார்கள்.  கலைஞர் டி. கே. சண்முகம், வல்லிக்கண்ணன், திருச்சி வானொலி நிலையத்தைச் சேர்ந்த மு. கணபதி, அசீரா, நாரண. துரைக்கண்ணன் ஆகிய ஐவர் அடங்கிய குழு செல்லம்மாவைப் பார்ப்பதற்காகச் சென்றது.  செல்லம்மாவிடம் விளக்கிச் சொன்னார்கள்.

எனக்கு இந்த அம்மையைப் பற்றி எண்ணும்போதெல்லாம் நன்றி உணர்ச்சி மேலெழும்.  பாரதியாருடைய எழுத்து மேசையின் மீது தாளையும் பேனாவையும் வைப்பார்களாம்.  வெற்றிலை பாக்கும், செம்பு நிறைய காபியும் வைப்பார்களாம்.  வீட்டில் ஒன்றும் இல்லை  ஏதாவது எழுதி, பத்திரிகைக்கு அனுப்பு என்பதற்கான குறிப்பு அது.  அப்படி இந்த அம்மை எழுது எழுது என்று தூண்டாதிருந்திருந்தால் எத்தனை அரிய எழுத்துக்கள் எழுதப்படாமலேயே போயிருந்திருக்குமோ!

மகிழ்ச்சியோடு சம்மதித்தார்கள்.  ஒப்புதல் கடிதத்தையும் எழுதிக் கொடுத்தார்கள்.  அந்தக் கடிதத்தை அப்படியே கீழே தருகிறேன்.

நாள் 23.4.1948,  இடம் திருநெல்வேலி கைலாசபுரம்.

ஓம்.
கனம் பிரதம மந்திரி இராமசாமி ரெட்டியார் அவர்களுக்குச் சக்தி அருள் புரிக.  மகாகவி பாரதியாருடைய பாடல்களையும் இலக்கியங்களையும் பொதுவுடைமையாக்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் கிளர்ச்சி நடந்து வருவதாகத் தெரிகிறது.  இது சம்பந்தமாகப் பிரசண்ட விகடன் ஆசிரியர் நாரண. துரைக்கண்ணன் அவர்களும், சிந்தனை ஆசிரியர் அ. சீனிவாச ராகவன் அவர்களும் என்னைக் காண வந்தார்கள்.  பாரதியார் இலக்கியங்களில் யார் யாருக்கு உரிமை இருக்கின்றனவோ அவற்றையெல்லாம் சென்னை அரசாங்கமே பெற்றுத் தமிழ் மக்களுக்குப் பொதுவுடைமையாக வழங்க உத்தேசித்திருப்பதாகவும், இந்தப் பணியில் தாங்கள் சிரத்தை காட்டுவதாகவும் என்னிடம் சொன்னார்கள்.  தங்கள் பெருந்தன்மையை மனமாரப் பாராட்டுகிறேன்.  இப்போதுள்ள உரிமைகளையும், இனி எழக்கூடிய உரிமைகளையும் நியாயமான முறையில் அரசாங்கமே பெற்றுப் பொதுமக்களுக்கு வழங்குவது எனக்குப் பூரண சம்மதம்.  தங்கள் முயற்சி சக்தி அருளால் வெற்றி பெறுக.  ஆனால் ஒன்று. இதைச் சொல்லக் கூசுகிறது.  என் கணவருடைய (பாரதியாருடைய) இலக்கியங்களுக்குள்ள செல்வாக்கின் காரணமாக, எனக்கோ அவருடைய குடும்பத்தாருக்கோ விசேடமான வசதி ஏற்படவில்லை என்பது தாங்கள் அறிந்ததே.  தரும நியாயமான முறையில்(check? ல உண்டா?) இந்தப் பணியை நிறைவேற்றுவீர்கள் என்று பரிபூரணமாக நம்புகிறேன்.

இப்படிக்கு,
செல்லம்மா பாரதி.

இந்த அம்மைக்குத்தான் பாரதி ‘நீ இப்படிக் கவலைப்படும் நேரத்தில் தமிழைப் படித்தால் நான் சந்தோஷமுறுவேன்’ என்று காசியிலிருந்து எழுதினான்.  எப்படி எழுதியிருக்கிறார்கள்! இவருடைய இரண்டு கட்டுரைகளை பாரதி பத்திரிகையில் பிரசுரித்திருக்கிறான்.  அருமையாக எழுதியிருக்கிறார்கள்.

இதை எழுதும் நேரத்தில் கூட என் விழி கசிகிறது. “இதைச் சொல்லக் கூசுகிறது.  என் கணவருடைய (பாரதியாருடைய) இலக்கியங்களுக்குள்ள செல்வாக்கின் காரணமாக, எனக்கோ அவருடைய குடும்பத்தாருக்கோ விசேடமான வசதி ஏற்படவில்லை என்பது தாங்கள் அறிந்ததே.  தரும நியாயமான முறையில் இந்தப் பணியை நிறைவேற்றுவீர்கள் என்று பரிபூரணமாக நம்புகிறேன்.”  எத்தனை நாசூக்கான வேண்டுகோள்!

இன்னொரு விஷயம்.  நாரண. துரைக்கண்ணன் அவர்கள் இந்தப் பணியை மேற்கொண்டு, அம்மையைச் சந்திக்கப் புறப்படும் நேரத்தில் அவருடைய ஒரே மகன் – நான்கு வயது – திப்தீரியாவால் பாதிக்கப்பட்டுக் கிடந்தான்.  கவலைக்கிடமான சூழலிலும், தாமதம் செய்ய விரும்பாமல் புறப்பட்டார்.  அவர் திரும்ப வருவதற்குள் அந்த மகன் காலமாகிவிட்டான்.

இந்த சம்மதக் கடிதத்துடன் ஓமந்தூராரைச் சந்தித்தனர்.  ஒரு motorcycle messenger மூலம் மெய்யப்பருக்குச் செய்தி அனுப்பப்பட்டது.  மெய்யப்பர் சொல்கிறார் –

“பின்னர் ஒருநாள் – அப்போது முதலமைச்சராக இருந்த ஒமந்தூர் ரெட்டியார் – இரவு ஏழு மணிக்கு ‘வெரி அர்ஜென்ட்’ என்பதாக மோட்டார் சைக்கிள் மெஸஞ்சரிடம் தம்மை அன்று இரவே எட்டு மணிக்குச் சந்திக்கும்படி செய்தி அனுப்பினார்.

“உடனே வருகிறேன்’ என்று சொல்லிவிட்டு அன்று இரவு எட்டு மணிக்கே சென்று அவரைக் கூவம் ஹவுசில் சந்தித்தேன்.  அப்போது அவர் என்னிடம் சொன்னார்: ‘நீங்கள் பாரதி பாடல்களின் உரிமையை வாங்கி வைத்திருப்பதாகக் கேள்விப்பட்டேன்.  பாரதியார் போன்ற தேசிய மகாகவியின் பாடல்கள் நாட்டின் பொதுச் சொத்தாக இருக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்,’ என்றார்.”

இத்தனைத் தமிழறிஞர்கள் சேர்ந்து ‘பாரதி விடுதலைக் கழகம்’ அமைத்துப் போராடியிருக்கிறார்கள்.  நாரண. துரைக்கண்ணன், வல்லிக்கண்ணன், அசீரா, ப. ஜீவானந்தம் போன்ற பெரிய அறிஞர்களும் தலைவர்களும் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்திருக்கிறார்கள்.  பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக எழுதியிருக்கிறார்கள்.  சட்ட சபையில் கேள்வி கேட்டிருக்கிறார்கள்.  அப்போதெல்லாம் திறக்காத மனக் கதவு, அரசாங்கம் அழைத்தவுடன் படாரென்று திறந்துகொண்டது.  “ஒரு வினாடி கூட யோசிக்காமல், ‘பாரதியார் பாடல்களின் உரிமையை இந்தக் கணமே அரசாங்கத்திற்கு டிரான்ஸ்பர் பண்ணி விடுகிறேன்.  எனக்கு ஒரு ரூபாய் கூட வேண்டாம்.  எந்தவிதப் பிரதி பிரயோசனமும் இன்றிக் கொடுக்கத் தயார்” என்று சொல்லிவிட்டேன்” என்று மெய்யப்பர் சொல்கிறார்.

ஐயா, கோயம்பத்தூர் நீதிமன்றம்தான் உங்களுக்கு பாரதி எழுத்துகளின் மேல் எந்த உரிமையும் இல்லை என்று சொல்லிவிட்டதே!  நீங்கள் காசுகொடுத்து வாங்கியிருக்கிறீர்கள் என்ற ஒரே காரணத்துக்காக அல்லவா அரசாங்கம் உங்களை அழைத்துக் கேட்டது!  ஒன்றுமே அறியாதது போல் சொல்கிறீர்களே,  “பாரதியார் பாடல்களை நாட்டுடமையாக்க வேண்டுமென்ற முயற்சி எடுத்தது அவ்வை டி. கே. சண்முகமாக இருந்திருக்கலாம்.  ஓமந்தூராரை விட்டு, ‘நீங்கள் கேளுங்கள். கொடுத்து விடுவார்’ என்று சொல்லியிருக்கலாம்” இதைத்தான் ஒப்புக் கொள்ள முடியவில்லை.

நீங்கள் அரசாங்கத்திடம் பணம் வாங்காமல் அப்படியே அளித்தீர்கள் என்பது உண்மை.  அதற்காக உங்களை மனதாரப் பாராட்டுகிறோம்.  எந்தப் பயனும் இல்லாமல் பால் மரத்துப் போன பசுமாடாய் உங்கள் வீட்டுத் தொழுவத்தில் கிடந்த பாரதி எழுத்துகளை விடுவித்தீர்கள் என்பதற்காக உங்களுக்கு என்றென்றும் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்.  பணம் வாங்கிக் கொண்டு தந்திருந்தாலும் இந்தப் பாராட்டை உங்களுக்கு அளித்திருப்போம்.  அதில் எந்த மாற்றமும் இல்லை.

ஆனால், நடந்த நிகழ்ச்சிகளை மறைத்திருக்கிறீர்கள் பாருங்கள், அதற்குத்தான் நீங்கள் பொறுப்பேற்க வேண்டும்.  நீங்கள் மட்டுமல்ல.  வரிந்து கட்டிக் கொண்டு ‘வள்ளல் மெய்யப்பரால்தான் பாரதி பாடல்கள் நமக்குக் கிடைத்தன’ என்று துதி பாடும் பத்திரிகைக் கூட்டமும்தான்.

மெய்யப்பரின் செல்வாக்கு எல்லா உண்மைகளையும் அமுக்குகிறது.  இந்த இடத்தில் எதிரொலி விசுவநாதனே பிசிறுகிறார்.  சி. விசுவநாதன், வள்ளல் மெய்யப்பரைப் போல தானமாகத் தரவில்லை.  உரிய தொகையைப் பெற்றுக் கொண்டே தந்தார் என்று எழுதுகிறார்.  ரா. அ. பத்மநாபன் மறைமுகமாக, தனியார் கைகளிலிருந்து விடுவிக்க அறிஞர்கள் முனைந்ததைப் பற்றிச் சொல்கிறாரே தவிர அந்தத் தனியார் யார் என்று சொல்லாமல் நழுவுகிறார்.  மெய்யப்பர் கொடுத்ததைப் பற்றிச் சொல்லும்போது மட்டும் வள்ளல் மெய்யப்பர் தந்தார் என்று பக்திப் பரவசத்துடன் சொல்கிறார்.

சித்திர பாரதியின் இரண்டாம் பதிப்பில் (1982) ரா.அ.பத்மநாபன் பின்வரும் குறிப்பைச் சேர்த்திருக்கிறார்.  (பக்கம் 194)

“பாரதி பாடல்களைத் தனிப்பட்டவர் உரிமையாக இன்றி மக்கள் உரிமையாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பாரதி விடுதலை இயக்கம் நடத்தியவர்களான டி.கே. ஷண்முகம், நாரண. துரைக்கண்ணன், திருலோக சீதாராம், வல்லிக்கண்ணன், அவெரா கிருஷ்ணசாமி ரெட்டியார் முதலியவர்களது பாராட்டத்தக்க முயற்சி விவரங்கள் எதிரொலி விசுவநாதன் நூலிலும் பிற நூல்களிலும் காணலாம்.”

தனிப்பட்டவர் இன்னார் என்று சொல்லவில்லை.  அப்படியே எதிரொலி விசுவநாதன் நூலைப் படிக்க வேண்டும் என்று யாரேனும் நினைத்தால், அந்நூலின் பெயரைச் சொல்லவில்லை. சொல்லியும் ஆயிற்று. சொல்லாமலும் விட்டாயிற்று.  நேர்மை!

மெய்யப்பர் விலை கொடுத்து வாங்கியதையோ அதற்குக் கப்பம் கட்டச்சொல்லி அனைவரையும் கட்டாயப்படுத்தியதையோ நான் குற்றமாகச் சொல்லமாட்டேன்.  அவரிடமிருந்து இதைத்தான் எதிர்பார்க்க முடியும்.  ஆனால் அதற்காக வள்ளல் பட்டம் கொடுத்துக் கொண்டாடுவதைதான் ஒப்புக்கொள்ள முடியவில்லை.  அதற்கும் மேல் ஒரு படி போயாயிற்று இப்போது.  அவர் அப்படி வாங்கி, பத்திரப்படுத்தி வைத்திருந்ததால்தான் பாரதியின் எழுத்து இன்று நமக்குக் கிடைக்கிறதாம்.  இல்லாவிட்டால் என்ன புதைந்தா போயிருக்கும்?  கறையான் அரித்து, கடல் கொண்டு போய்விட்டிருக்குமா என்ன?  அப்படியே போயிருந்தாலும், பெ. தூரன், ரா. அ. பத்மநாபன், சீனி. விசுவநாதன், பெ. சு. மணி போன்ற பெருமக்கள் தீயின் வாயினின்று கூட மீட்டு வந்திருப்பார்கள்.  ராஅப பெயரைச் சேர்த்திருக்கிறாயே என்கிறீர்கள், அப்படித்தானே?  அவரை விட்டுவிட்டால் பாரதி என்னை மன்னிக்கவே மாட்டான்.  இப்படி எழுதியதற்காக அவருடைய பாரதி பணிகளை மறந்துவிட முடியுமா என்ன?  அவருடைய தீவிரமான தேடுதல் முயற்சியாலல்லவோ என்னைப் போன்றோர்கள் பாரதியின் காணாமல் போயிருந்த எழுத்தையெல்லாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

மெய்யப்பரிடமிருந்து பாரதியின் பாடல்கள் அரசாங்கத்தின் கைக்கு வந்தது.  ஆனால் நிலைமையில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை.  இப்போது அரசாங்கம் அந்தத் திருப்பணியைத் தொடர்ந்தது.  பாரதி நூல்கள் குமாராசாமி ராசா அவர்கள் முதலமைச்சரானபோது அரசுப் பதிப்பாக வந்தன.  அந்தப் பதிப்பை ஆதாரமாகக் கொண்டு பிற பதிப்பாளர்கள் பாரதி நூல்கள் வெளியிட அரசின் அனுமதியைப் பெறவேண்டியிருந்தது.  திரைப்படங்களில் பாட, பாடல் ஒன்றுக்கு ரூ.200 தரவேண்டியிருந்தது.  இசைத்தட்டுகளில் பதிய, இசைத்தட்டின் விலையில் 2.5% அரசாங்கத்துக்குத் தரவேண்டியிருந்தது.  பாரதி பாடல்களை வெளியிட ஒரு வரிக்கு நான்கணா; குறைந்தபட்சம் ஐந்து ரூபாய் என்ற வரிவிதிப்பும் தொடர்ந்தது.

மீண்டும் தமிழறிஞர்கள் போராடத் தொடங்கினர்.  அரசு தன் நிலையை மாற்றிக்கொள்ளா விட்டால் போராட வேண்டிவரும் என்றறிவித்தார்கள்.  இதன் விளைவாக இந்த நிலை மாறியது.  20.4.1955 அன்று பிறப்பிக்கப்பட்ட அரசாணையால் பாரதி பாடல்கள் பொதுவுடமையாக்கப்பட்டன.  அதன் பிறகு இரண்டாண்டுகள் கழித்தே பாரதி உரைநடை பொதுவுடமையானது.

இந்த நீண்ட வரலாற்றில் பாரதியின் எழுத்து பரவுவதற்காகத் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர்கள் கணக்கற்றவர்.  பெயர் தெரியாப் பெரியோர்கள் ஏராளம்.   தன் மகனை காலன் பறித்துக் கொண்டு சென்ற கணத்தில் கூட அவனருகில் இல்லாமல், பாரதி எழுத்தை விடுவிக்க வேண்டும் என்று உழைத்த நாரண. துரைக்கண்ணன் என்ற எழுத்தாளரின் பெயர் யாருக்காவது தெரியுமா?  குரோம்பேட்டையில் பரலி. சு. நெல்லையப்பரின் பெயரில் ஓர் அரசு உயர்நிலைப் பள்ளி இருக்கிறது.  வேண்டுமானால் அங்கே போய், ‘பரலி நெல்லையப்பர் பள்ளி’ எங்கே இருக்கிறது என்று கேட்டுப் பாருங்கள்.  நான் கேட்டிருக்கிறேன்.  ‘இவன் யாருடா ஊருக்குப் புதுசு’ என்பது போல் பார்ப்பார்கள்.  சில ஆண்டுகளுக்கு முன்னால் ‘பாரதி பாடல்களை விடுவிப்பதற்கு நானும் போராடினேன்’ என்று வல்லிக்கண்ணன் ஆனந்தவிகடனில் சொல்லியிருந்தார்.  என்ன போராட்டம் என்று யாராவது மூச்சு விட்டால்தானே!

இத்தனைப் பேர்களின் உழைப்பில் கிடைத்த சொத்தை, கொஞ்ச காலம் வாங்கி வைத்திருந்து வியாபாரம் செய்துவிட்டுப் பின்னர் அதனால் இனிமேலும் பயனில்லை என்ற நிலையில் தந்தவர் வள்ளல் என்று போற்றப்படுவது என்ன நியாயம்?

நான் முன்னரே கேட்ட கேள்விகளை மீண்டும் உங்கள் முன் வைக்கிறேன்.

1) மெய்யப்பர் பாரதி பாடல்களின் விலை கொடுத்து வாங்கினார்.  வாங்கியவர் பொருள் ஈட்டியதல்லால் என்ன செய்தார்?
2) அவ்வாறு ஈட்டிய பொருளை பாரதி குடும்பத்தாருடன் பகிர்ந்துகொண்டாரா?
3) பாரதி பாடல்களைப் பரப்ப என்ன செய்தார்?  ஏதேனும் பதிப்பு வெளியிட்டதுண்டா?
4) பாரதி பாடல்களைப் பாடிய குற்றத்திற்காக அப்படிச் செய்தவர்களைத் தடுத்ததும், வழக்குப் போட்டதும் வள்ளல்கள் செய்யும் செயலா?
5) செய்வதை எல்லாம் செய்துவிட்டு இலவசமாகக் கொடுத்தார் என்பதை மட்டுமே சொல்லிக் கொண்டிருப்பது எந்த ஊர் நியாயம்?
6) இதற்கு விவரமறிந்த பத்திரிகைகள் துணைபோவது எத்தனை அநீதி!
7) பாரதி வரலாற்றாசிரியர்கள் உண்மையை மறைத்தும், திரித்தும் எழுதுவது எத்தனை வெட்கக்கேடு!

License

Share This Book