பகீரதனின் பிரயத்தனத்தால் கங்கை பொங்கி வந்தது.  சிவனுடைய சடாமுடியில் ஒடுங்கியது.  அதன் பின்னர் ஜன்ஹு முனிவரால் குடிக்கப்பட்டு அவருடைய காதின் வழியாக மறுபடியும் ஓடலாயிற்று.  பொங்கி வந்த கங்கை ஆங்காங்கே பல தேக்கங்களைச் சந்தித்த பிறகே இன்று ஓடிக்கொண்டிருக்கிறாள்.  இந்தக் கதையில் உண்மையிருக்கிறதா இல்லையா என்று ஆராய்வதல்ல நமது நோக்கம்.  இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் கட்டுக்கடங்காத ஒரு பிரவாகம் கங்கையைப் போன்றே ஓடியது.  அது புறப்பட்ட காலத்திலேயே பரவலாக மதிக்கப்பட்டாலும் பெரும்பாலும் எதிர்ப்பையே சந்தித்து வந்தது.

அந்தப் பிரவாகத்தின் ஊற்றுக்கண்ணாக விளங்கிய – சீவலப்பேரி சின்னசாமியின் மகனான – சுப்பிரமணிய பாரதி இறந்த பிறகும் இந்தக் கம்பீரக் கவிதா நதியின் ஓட்டம் அவ்வப்போது தடைகளைச் சந்தித்தே வந்தது.  தமிழின் பாக்கியம்.  தடைகள் உடைந்தன.  இன்று தடையற்று அந்த வெள்ளம் அனைவரிடத்திலும் பாய்கிறது.

பாரதி என்று திரைப்படம் எடுக்கும் போதும் அது வெளி வந்த போதும் ‘இது ஓடுமா’ என்ற ஒரு பதைப்பு அனைத்துத் தரப்புகளிலும் இல்லாமலில்லை.  படம் வெகு சிறப்பாக ஓடியதுடன் விருதுகளும் பெற்றது.  சில காலங்களுக்கு முன்பு ஒரு பிரபல நடிகர் பாரதியாக நடிப்பதாக இருந்தது.  ஆனால், பிரபல நடிகர்கள் யாரும் நடிக்காமலேயே இந்தப் படம் இப்படி ஓடியது, தமிழ் மக்களின் இதயத்தில் பாரதி எத்தகைய அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றிருக்கிறான் என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது. நல்ல வேளையாகப் பிரபல நட்சத்திரங்கள் யாரும் நடிக்கவில்லை.  இல்லாவிட்டால் ‘பாரதி படம் ஓடியதே இன்னாரால்தான்.  இல்லாவிட்டால் பாரதி படத்தைப் போய்ப் பார்க்கும் அளவுக்கு எந்தத் தமிழனுக்கு ஆர்வமும் அறிவும் இருக்கிறது.  பாரதியின் பெருமையை உயர்த்தியவரே இன்னார்தான்’ என்று அந்த நடிகரைக் கொண்டாட ஆரம்பித்திருப்பார்கள்.

நம் கதைக்கு வருவோம்.  மேற்படி திரைப்படத்தைச் சொன்னது எதற்கென்றால், அதே திரைப்படத் துறையைச் சேர்ந்த ஒருவர் பாரதியின் பாடல்கள் என்னும் கங்கா நதியைத் தன் வீட்டுக் கிணற்றில் பதுக்கிக்கொண்டார்.  அந்த நதியைப் பயன்படுத்த வேண்டும் என்றால் எனக்குக் கப்பம் கட்ட வேண்டும் என்று அறிவித்து வசூலும் செய்து வந்தார்.  அந்தக் கொடுமையிலிருந்து தமிழகம் தப்பியதே ஒரு பெரிய கதை.  இன்றைக்கு என்ன சொல்கிறார்கள் என்றால், அந்த நதியின் அருமையைத் தெரிந்தே பாதுகாத்து வைத்திருந்து (அடடா!) அணை கட்டி (ஆஹாஹா) தமிழ் மக்களுக்குத் தக்க தருணத்தில் அணையை உடைத்து விட்டு (அடட டடடா!) இன்றைக்கு அந்தப் பாடல்களை அனைவரையும் அனுபவிக்கச் செய்திருக்கும் செம்மல் விம்மல் தும்மல் என்று பாடாத பாட்டெல்லாம் பாட வருகிறார்கள்.  ஊடகங்கள் அவர்கள் கையில்.  பணம் அவர்கள் கையில்.  என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்.

யாரையும் புண்படுத்த  வேண்டும் என்பதோ, களங்கப்படுத்த வேண்டும் என்பதோ நமது நோக்கம் அன்று.  நடந்த நிகழ்ச்சிகளை அவரவர்களின் மனப் போக்குக்கு ஏற்ப, திரித்துச் சொல்வது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.  உள்ளது உள்ளபடி வரும் காலத்திற்குத் தெரிய வேண்டும்.  மறைப்புகளாலும் திரிப்புகளாலும் பாரதி பாடல்களில் களிம்பு ஏற ஆரம்பித்திருக்க காலகட்டம் இது.

சுமார் இரண்டாண்டுகளுக்கு முன்னால், என் இணைய நண்பர்களில் ஒருவரான ஈழத்துக் கவிஞர் இரமணீதரன் ‘பாரதி பாடல்களே கூட ஏவிஎம் தன்னுடைய பாடல் பதிவுக் கூடத்திற்காக வாங்கிப் பாதுகாத்திரா விட்டால், இன்றளவும் நின்றிருக்குமா?’ என்றொரு கேள்வியை எழுப்பினார்.  மலேசியாவைச் சேர்ந்த, ‘இணையப் பெரிசு’ என்று எல்லாத் தரப்பினராலும் பாராட்டப்பட்டும், வணங்கப்பட்டும் வரும் டாக்டர் ஜெயபாரதி ஏறத்தாழ இதே போன்ற ஒரு கேள்வியை என்னிடத்தில் எழுப்பினார்.  நிலைமை வேறொரு திசையில் சென்றுகொண்டிருக்கிறது.  யாரோ எதற்காகவோ வாங்கிய காரணத்தால்தான் பாரதி பாடல்கள் இத்தனைக் காலச் செலவைக் கடந்து நம் கைகளை அடைந்திருக்கின்றன என்றொரு புது வகையான பொய் யாராலோ உருவாக்கப்பட்டு உலா வந்துகொண்டிருக்கிறது.  அதை நல்ல அறிஞர்களும், பெயர்பெற்ற கவிஞர்களும் நம்பவும் ஆரம்பித்துவிட்டனர்.  பொய்கள் யாரைப் பாதித்தாலும் சரி.  பாரதி பாடல்களை பாதிக்க அனுமதிப்பதில்லை என்று டாக்டர் ஜெயபாரதியின் தலைமையில் இயங்கும் அகத்தியர் மின்னஞ்சல் குழுவுக்காக (agathiyar@yahoogroups.com) நான் தொகுத்த செய்திகளின் அடிப்படையில் எழுதிய கட்டுரையின் மறுவடிவம் இது.  உண்மைகளை உலகுக்குச் சொல்லித்தான் ஆக வேண்டும்.

1921 செப்டம்பர் 12 பிறந்த நடுநிசி நேரத்தில் பாரதி மறைந்தான்.  பாரதியின் தகனத்தில் பதின்மூன்றே பேர் மட்டும் பங்கேற்றனர்.  இதற்குப் பல காரணங்கள்.  அவற்றை ஆய்வதற்கு இது இடமன்று.  அவனுடைய மறைவிற்குப் பிறகு எஸ். சத்தியமூர்த்தி ஒரு அறிக்கை விடுத்தார்.  பாரதியின் எழுத்துக்களைப் பிரசுரித்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயை அவனுடைய குடும்பத்தாருக்குத் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

அதே செப்டம்பர் மாதத்தில் ஒரு கமிட்டி ஏற்படுத்தப்பட்டது.  இதற்குத் திலகர் ஸ்வராஜ்ய நிதியிலிருந்து ஆயிரம் ரூபாய் (நினைவிருக்கட்டும் 1921ல் ஆயிரம் ரூபாய்), தமிழ் மக்கள் உதவிய ரூ.12 (பன்னிரண்டு மட்டும்), மற்றும் ரங்கூனிலிருந்து வந்த நிதி என்று நிதியாதாரம் கிடைத்தது.  பாரதியின் மனைவி செல்லம்மாவும், அவரது சகோதரர் க. ரா. அப்பாதுரையும் (பாரதியின் மைத்துனர்; கலெக்டர் ஆஷ் கொலை வழக்கில் வாஞ்சியின் கூட்டாளி என்று ஓராண்டு சிறை சென்றவர்) பாரதி ஆசிரமம் என்று ஒரு அமைப்பை ஏற்படுத்தினர்.  (பாரதி? ஆ! சிரமம்!)

ஆமாம்.  பாரதி ஆசிரமம் நடத்துவது அத்தனை சிரமமானதாகிவிட்டது, வெகுவிரைவில்.  பாரதி பாடல்கள் விற்பனையாகவில்லை.  கானாடுகாத்தானில் வை. சு. சண்முகம் செட்டியார் என்றொருவர் இருந்தார்.  செட்டிமக்கள் குலவிளக்கு என்று பாரதி ஒரு பாடல் எழுதியிருக்கிறாரல்லவா? (“பல்லாண்டு வாழ்ந்தொளிர்க கானாடுகாத்த நகர்ப் பரிதிபோன்றோய்” என்று ஆரம்பிக்கும்)  அந்தப் பாடல் இவர் மீது இயற்றப்பட்டதுதான்.  1923ல் பாரதி பாடல்களைத் தாம் பிரசுரிப்பதாகவும், விற்பனைப் பொறுப்பைத் தாமே ஏற்றுக்கொள்வதாகவும் கூறி ரூ.10,000/- கொடுக்க முன்வந்தார்.  செல்லம்மா பாரதி ஒப்புக்கொண்டாலும் அப்பாதுரையின் ஆர்வமின்மையால் இது நடக்கவில்லை.  அந்த ஆண்டிலேயே பாரதி ஆசிரமத்தின் பதிப்பு வேலைகளும் நின்று போயின.

இந்தக் காலகட்டத்தில் பாரதிக்குத் தமிழ்ப் பண்டிதர்களின் எதிர்ப்பு அதிகமாகவே இருந்தது.  பாரதியின் பாடல்களின் எளிமையைக் கருதி அவரை முண்டாசு கட்டிக்கொண்ட பண்டாரக் கவிஞர் என்று கேலி பேசியவர்கள் உண்டு.  இலக்கணமறியாத வெள்ளைப் புலவன் என்று விவரமறியாமல் பேசிய அதிமேதாவிகள் உண்டு.

பாரதியார் அண்ணாவி புலவர் என்பார்
கல்வியினில் பழக்கம் இல்லார்
சீரறியார் தளையறியார் பல்லக் கேறுவார்
புலமை செலுத்திக் கொள்வார்
ஆரணியும் தண்டலை நீள்நெ றியாரே
இலக்கணநூல் அறியா ரேனும்
காரிகையா கிலும்கற்றுக் கவிதை சொல்லார்
பேரிகொட்டக் கடவர் தாமே

என்று பாரதி மேல் பாட்டுப் பாடிய பெரும் (வெறும்?) புலவர்கள் உண்டு,  எளிய பதங்களைக் கொண்டு இதயத்தைத் தொடுவதுபோல் எழுதினால் பண்டிதர்களால் பொறுத்துக்கொள்ள முடியுமா?  கண் என்பதைச் சக்கு என்றல்லவா சொல்ல வேண்டும்?

1924ல் பாரதியின் இளைய மகள் சகுந்தலாவுக்குத் திருமணம் நடந்தது.  திருமணச் செவவுக்காக பாரதியின் பாடல்களை (அடகு) வைத்து ரூ.2000 கடன் பெறப்பட்டது என்று சொல்கிறார் பாரதி ஆய்வாளர் ரா. அ. பத்மநாபன்.  பாரதியின் கவிதைகள் அதிகம் விற்காத நிலையில் அவருடைய குடும்பத்தார் நிலையான வருவாயின்றித் தவித்தனர்.  கடன் சுமையும் தீர்க்க ஒண்ணாததாக இருந்தது.

ஆனாலும் அவன் பாடல்களின் அருமையை உணர்ந்தாரும் பலர் இருந்தனர்.  ஹரிஹர சர்மா (பாரதியின்  நெருங்கிய நண்பர்; தூரத்து உறவினர்) பாரதியின் தம்பி சி. விசுவநாதன் ஆகியோர் கதர்க் கடைகளில் பாரதி கவிதைகளை வைத்து விற்க ஏற்பாடு செய்தனர்.  பாரதியைப் பரப்ப முயற்சிகள் நடந்தன.  பாரதியின் பாடல்கள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் காந்தியடிகளின் யங் இந்தியாவில் வெளியிடச் செய்து பாரதியின் பெருமையை இந்தியா முழுவதற்கும் அறிவித்தார்.  (“பாரதி ஞாபகார்த்த பிரயத்தனங்களுக்கு என் ஆசிர்வாதம்” என்று கோணல் மாணலான கையெழுத்தில் காந்தியடிகள் தமிழில் எழுதியிருக்கிறார் – பாரதி மணிமண்டபம் கட்டப்பட்ட போது..)

பர்மா அப்போது இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது.  பர்மிய அரசு பாரதியின் எழுத்துக்கள் ராஜ துவேஷமானவை என்று அறிவித்தது.  தென்னை மரத்தில் தேள் கொட்டிவிட்டது.  பனைமரத்துக்கு நெறிகட்ட வேண்டாமா? 1928 செப்டம்பர் 11 அன்று (வேடிக்கை.  பாரதி மறைந்த நாள்!) சென்னை அரசாங்க கெஜட் அந்தத் தடையுத்தரவைத் தானும் மேற்கொள்வதாகத் தெரிவித்தது.  பாரதியின் நூல்கள் எல்லாம் கையகப்படுத்தப்பட்டன.  பாரதி ஆசிரமம் மற்றும் நூல்களை அச்சடித்த ஹிந்தி பிரசார் அச்சகம் ஆகியவை சோதிக்கப்பட்டு 2000 பிரதிகள் பறிமுதல் செய்யப்பட்டன.  பாரதி பாடல்களைப் பாடுவதற்குத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தடையுத்தரவு, மக்கள் மத்தியில் ஆவேசத்தைத் தூண்டிவிட்டது.  இந்த ஆவேசம் பலவிதமாக வெளிப்பட்டது.  உதாரணத்துக்கு ஒன்று சொல்ல வேண்டுமானால், 1933ல் பாரதி பஜனை சமாஜம் என்று மதுரையில் சீனிவாச வரதன் என்பவர் ஆரம்பித்தார்.  தினந்தோறும் பாரதி பாடல்களைப் பாடிக்கொண்டு காலையிலும் மாலையிலும் வீதிவலம் வந்தார்கள்.

தடையுத்தரவை மீறி, தம் நாடகங்களில் பாரதியின் பாடல்களைப் பாடினார் நடிகர் எஸ். ஜி. கிட்டப்பா.  பெரிய போராட்டங்களாலும் சத்தியமூர்த்தி போன்றோரின் பெருமுயற்சியாலும் (அந்தக் கால கட்டத்தில் நடந்த சட்டசபை விவாதங்களைத் தனி நூலாக வெளியிட்டிருக்கிறார்கள்.  பாரதி அன்பர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்.)  பாரதியின் பாடல்களுக்கான தடை நீங்கியது.

அது சரி, ஏவிஎம்முக்கும் நீ சொல்வதற்கும் என்ன தொடர்பு என்கிறீர்கள்.  புரிகிறது.  இந்தப் பின்னணியை மனத்தில் இருத்திக்கொள்ளுங்கள்.  ஏவிஎம்முக்கு வருகிறேன்.

License

Share This Book