மெய்யப்பருக்கு அவருடைய திரைப்படத்தில் சேர்ப்பதற்காகப் பாரதி பாடல் தேவைப்பட்டது.  ஆனால் அவற்றின் உரிமை யாரிடம் இருந்தது என்பது அப்போது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.  கொஞ்சம் முனைப்பாகத்தான் தேடியிருக்கிறார்.  சென்னை ரத்தன் பஜாரில் சுராஜ்மல் அண்ட் சன்ஸ் என்ற பெயரில் ஜோஷிங்லால் மேத்தா என்பவர் ஓர் ஒலிப்பதிவு கம்பெனி வைத்திருந்தார்.  அவரிடம்தான் பாரதி பிரசுராலயம் பாரதி பாடல்களின் ஒலிப்பதிவு உரிமையை விற்றிருந்தது.  அவர்கள் அறுநூறு ரூபாய்க்கு வாங்கியிருந்தார்கள் என்று சொல்கிறார் மெய்யப்பர்.

பாரதி பாடல்களின் உரிமை எந்த வரையறையுடன் விற்கப்பட்டன?  எத்தனை ரூபாய்க்கு?  யாராவது தெளிவாகச் சொல்கிறார்களா பார்ப்போம்.  இந்தச் சின்ன விவரத்திலும் குளறுபடி.  சித்திர பாரதியில் ரா. அ. ப. சொல்கிறார்.  “இந்தச் சமயத்தில், பாரதி பாடல்களை ஒலிப்பதிவு செய்யும் உரிமை ஸரஸ்வதி ஸ்டோர்ஸ் வெளியிட்டு வந்த ‘பிராட்காஸ்ட்’ ரிகார்டுகளுக்காக ஏ. வி. மெய்யப்ப செட்டியாரால் 400 ரூபாய்க்கு வாங்கப் பட்டது.”  (சித்திர பாரதி, பக்கம் 140)

மேலே மெய்யப்பர் சொன்னபடி பார்த்தால்  அவருக்கு விற்ற சுராஜ்மல் அண்ட் சன்ஸ்காரர்களே இதை விட இருநூறு ரூபாய் அதிகம் கொடுத்திருக்கிறார்கள்.  இந்த விஷயத்தில் மெய்யப்பர் சொல்வது மட்டும்தான் உண்மையாக இருக்க முடியும்.  ஏனெனில் அவர் இதில் நேரடித் தொடர்பு உள்ளவர்.

எதிரொலி விசுவநாதன் கூறுகிறார்.  “வள்ளல் மெய்யப்பர் பாரதி பாடல்களின் ஒலிப்பதிவு உரிமைகளை அரசாங்கத்திற்குத் தானமாக வழங்கிவிடுவதாகப் பாரதி விடுதலைக் கழுகத்தின் மூலமாக அறிவித்தார்.  அவற்றை அவர் பத்தாயிரம் ரூபாய் பணம் கொடுத்து வாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.” (பாரதிக்கு விடுதலை, பக்கம் 85)

மெய்யப்பர் சொல்கிறார்.  “மடியில் பத்தாயிரம் ரூபாயைக் கட்டிக்கொண்டு நான் சென்றேன்.  அவர் பாரதியின் பாடல்களை அறுநூறு ரூபாய்க்குத்தானே வாங்கியிருக்கிறார்.  இரண்டாயிரம், மூவாயிரத்துக்குள் முடித்துவிடலாம் என்கிற நினைப்பில் வியாபாரத் தந்திரங்களை எல்லாம் நான் உபயோகித்துப் பார்த்தேன்.  அவர் என் தந்திரங்களுக்கெல்லாம் மேற்பட்டவராக இருந்தார்.  உபயோகம் இருந்தாலும் சரி.  இல்லாவிட்டாலும் சரி.  நான் வாங்கிய ரூபாயைப் பற்றிக் கேட்கவேண்டியதில்லை.  பத்தாயிரம் ரூபாய் தருவதாக இருந்தால் சொல்லுங்கள், உங்களுக்கு அந்தக் காப்பிரைட் உரிமையை மாற்றித் தருகிறேன் என்றார்.”

அவருக்கு மனம் மாறுவதற்குள் அங்கேயே அக்ரிமென்ட் எழுதி உடனேயே பணத்தைக் கொடுத்து உரிமையைத் தன் மேல் மாற்றிக் கொண்டதாகச் சொல்கிறார் மெய்யப்பர்.  அது இருக்கட்டும்.  இந்த உரிமை எந்த அளவுக்கு விரிவானது அல்லது எந்த அளவு வரை மட்டும் பயன்படுவதாக இருந்தது?  ‘ஒலிப்பதிவு உரிமையை’ பாரதி பிரசுலாயத்தார் சுராஜ்மல் அண்ட் ஸன்ஸுக்கு விற்றதாகச் சொல்லப்படுகிறது.  மெய்யப்பர் தமிழக அரசுக்கு எழுதித் தந்திருக்கும் பத்திரமும் அதையேதான் சொல்கிறது.

4 ஆகஸ்ட் 1934ல் பாரதி பிரசுராலயம் மேற்படி நிறுவனத்தாருக்கு விற்றார்கள் என்று பத்திரத்தில் மெய்யப்பர் குறிப்பிட்டிருக்கிறார்.  எதற்காக?  பாரதியின் பாடல்கள், எழுத்துகள், செய்யுட்கள் ஆகியவற்றை கிராமபோன், ஒலிபரப்பு மற்றும் இதர ஒலிபரப்புச் சாதனங்கள் வாயிலாகப் பயன்படுத்துவதற்கு என்று சொல்லப்பட்டிருக்கிறது.  “the rights of reproduction by gramaphone, broadcasting and other sound producing devices of the songs, works and compositions of the late C. Subramanya Bharathi” என்பது அரசுக்கு மெய்யப்பர் எழுதிக் கொடுத்த பத்திரத்தில் காணப்படும் வாசகம்.  அதே உரிமையத்தான் மெய்யப்பர் மேற்படி சுராஜ்மல் அண்ட் சன்ஸ் நிறுவனத்திலிருந்து பெற முடியும் என்பது வெளிப்படை.

ஆனால், ஒலிப்பதிவுக்காக என்று சுராஜ்மல் அண்ட் சன்ஸ் வாங்கிய போதும் சரி, பிற்பாடு ஏவிஎம் வாங்கியபோதும் சரி.  ஒரு விஷயம் உதைக்கிறது.  மெய்யப்பருடைய பத்திரத்தில் காணப்படும் ஷெட்யூல் 1 மற்றும் ஷெட்யூல் 2ல்  (அரசுக்கு அளிக்கப்பட்ட) உள்ள பட்டியல் சற்று வினோதமாகப் படுகிறது.  தேசிய கீதங்கள், ஸ்தோத்திரப் பாடல்கள், வினாயக நான்மணி மாலை போன்ற பாடல்களுடன் ஞானரதம், பதஞ்சலி யோக சூத்திரம், வேத ரிஷிகளின் கவிதை, பகவத் கீதை மொழிபெயர்ப்பு, நவதந்திரக் கதைகள் போன்ற உரைநடை நூல்களும் காணப்படுகின்றன.

பாடல்களை ஒலிப்பதிவு செய்யலாம்.  அல்லது மற்ற ‘ஒலி உற்பத்திச் சாதனங்கள்’ வாயிலாகப் பயன்படுத்தலாம்.  இந்த உரைநடைப் பகுதிகளை என்ன செய்யலாம்?  எந்த விதத்தில் ஒலிப்பதிவுக்கு உபயோகிக்கலாம்?  உபயோகிக்க முடியாதல்லவா?  அப்படியானால், இவை ஏன் இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருக்கின்றன?  பாரதியின் பெரும்பாலான எழுத்துகள் இந்தப் பட்டியல்களில் அடங்குகின்றன.  (முழுப் பட்டியலுக்குப் படத்தைக் காணவும்.) ஒலிப்பதிவு உரிமை என்று சொல்லப்பட்டாலும், மற்ற எழுத்துகளுக்கு அது (ஒலிப்பதிவு உரிமை) பொருந்தாது என்பதால் அவை யாராலும் பயன்படுத்த முடியாத நிலையிலிருந்தன என்பது வெளிப்படை.  அல்லது அப்படிப் பயன்படுத்த, சம்பந்தப் பட்டவர்களின் அனுமதி தேவைப்பட்டது.  அப்படி அனுமதி தருவதற்குப் பணம் தேவைப்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

 

Bharati AVM Document 1

 

Bharati AVM Document 2-1

Bharati AVM Document 2-2

 

Bharati AVM Document 3

மூலம் – ஏவிஎம் சுயசரிதம்

 

 

இங்கே நான் ஏவிஎம் அவர்கள் மீது மட்டும் குற்றம் சாட்டவில்லை.  என்ன நோக்கத்திற்காக விற்கிறோம் என்றே தெரியாமல் பாரதி பிரசுராலயத்தார் விற்றிருக்கிறார்கள்.  ஏன் வாங்குகிறோம் என்றே தெரியாமல், ‘நல்லா போணியாறான் ஹை’ என்று ஜோஷிங்லால் மேத்தாவும் வாங்கி மூலையில் போட்டிருக்கிறார்.  வெறும் அறுநூறு ரூபாய்க்கு! ஆள் அகப்பட்டதும் பத்தாயிரத்திற்கு இவர் தலையில் கட்டி விட்டனர்.

ஜோஷிங்லால் மேத்தா பாரதி பிரசுரலாயத்திடமிருந்து மேற்படி இரண்டும் கெட்டான் உரிமையை வாங்கியது 4.8.1934 அன்று.  இந்த உரிமை ஏவிஎம்முக்குக் கை மாறியது 10.9.1946 அன்று.  மேத்தா சுமார் 12 ஆண்டுகள் பிடித்து வைத்திருந்தார்.  மெய்யப்பர் மூன்றாண்டுகள் தன்னிடம் வைத்திருந்தார்.

சித்திர பாரதியில் இன்னுமொரு விவரம் கிடைக்கிறது.  “1949-ம் ஆண்டில் பாரதி பிரசுராலயத்திடமிருந்த பதிப்புரிமையை சி. விசுவநாதனிடமிருந்து அரசாங்கம் விலைக்கு வாங்கியது.  பாரதி பாடல்களின் ஒலிப்பதிவு உரிமையை ஏ. வி. மெய்யப்பச் செட்டியார் இலவசமாக வழங்கினார்.”  அதாவது பத்மநாபன் அவர்களின் கூற்றுப்படி, மெய்யப்பர் ரூ.400க்கு வாங்கிய ‘ஒலிப்பதிவு உரிமையை.’  இந்த இடத்தில், உரிமையை, பதிப்புரிமை, ஒலிப்பதிவு உரிமை என்று இரண்டாகப் பிரித்துக் காட்டுகிறார் ரா. அ. ப.   எதிரொலி விசுவநாதன் இதைப்பற்றி சொல்லும்போது “பாரதி பாடல்களின் உரிமையை வைத்திருந்த சி. விசுவநாதன் அவற்றை மெய்யப்பரைப் போல தானமாக வழங்கிடவில்லை.  அரசாங்கத்தாரிடமிருந்து குறிப்பிட்ட தொகையைப் பெற்றுக் கொண்ட பிறகே அவற்றை அவர் அரசாங்கத்தாரிடம் வழங்கினார்,” என்று சொல்கிறார்.

பாரதி பாடல்களின் பதிப்புரிமை விசுவநாதரிடம்; ஒலிப்பதிவு உரிமை மெய்யப்பரிடம் என்று பிரித்துக் கொண்டிருக்கிறார்களோ என்று பார்த்தால், உரைநடைப் பகுதியின் ஒலிப்பதிவு உரிமை என்பது விசித்திர, வினோத, விபரீத காரணியாக அல்லவா தோன்றுகிறது!  பாடல்களை வாங்கியவர்கள், அவற்றை ஒலிப்பதிவு உரிமைக்குப் பயன்படுத்தலாம்.  உரைநடையை என்ன செய்யலாம்?  பதிப்பிக்க வேண்டுமல்லவா?  புத்தகம் கொண்டுவர வேண்டுமல்லவா?  அதுதானே உண்மையான நோக்கமாக இருக்க முடியும், அது வியாபார நோக்கமாகவே இருந்தால் கூட?  அப்படி இல்லாத பட்சத்தில் அவற்றை விலை கொடுத்து வாங்குவானேன்?   ஒலிப்பதிவு உரிமையைத் தவிர மற்ற உரிமைகளை வாங்கவில்லை என்று மறுக்க முடியாது. அப்படி வாங்கவில்லை என்றால் எப்படி அரசுக்கு உரைநடை நூல்களையும் சேர்த்து இலவசமாகத் தத்தம் செய்ய முடியும்?  சி. விசுவநாதன் அவர்கள் அரசாங்கத்துக்கு எழுதிக் கொடுத்த பத்திரத்தைப் பார்த்தால் ஒழிய இந்த விஷயத்தில் தெளிவாக எதையும் சொல்ல முடியாது.

இப்படி உரிமையை ஒட்டு மொத்தமாக வாங்கி வைத்துக் கொண்டு, நேரடியாக அவற்றைப் பயன்படுத்தாமல், அடுத்தவர்கள் பயன்படுத்த, ‘பணம் கொடு’ என்று நிர்பந்தித்தால் யார் அவற்றைப் பதிப்பிப்பார்கள்?  யார் அவற்றை எடுத்தாள்வார்கள்?  யார் அவற்றை மேற்கோள் காட்டுவார்கள்?  யாராவது படிக்க முடிந்தால்தானே மேற்படிக் காரியங்களைச் செய்ய முடியும்?  பதினைந்து ஆண்டுகள் பாரதி பாடல்கள், எழுத்துகள் எல்லாம் வனவாசமிருந்தன. பாண்டவர்களுக்குப் பதின்மூன்றாண்டு.  ராமனுக்குப் பதினான்கு.  பாரதிக்குப் பதினைந்து.

பாரதி பிரசுராலயத்திலிருந்து விலைக்கு வாங்கிய ஜோஷிங்லால் மேத்தா சும்மா போட்டு வைத்திருந்தார்.  ‘மாடு தின்னாமலும் மனிதர் தொடாமலும் வைக்கோலில் படுத்த நாய்போல்’ என்று கண்ணதாசன் பாடியது போல, யாருக்கும் பயன்படாமல் கிடந்தது பாரதி எழுத்து.  மெய்யப்பர் அவ்வாறு விட்டு விடவில்லை.  “நாம் இருவர் கதைக்கே நான் கொடுத்தது மூவாயிரம்.  அதில் வருகிற இரண்டு மூன்று பாடல்களுக்குப் பயன்படுத்திக் கொள்வதற்காகப் பாரதியார் பாடல்களின் காப்பி ரைட்டுக்குப் பத்தாயிரம் கொடுத்தேன்.”

கதைக்கே மூவாயிரம் கொடுத்தாராம்.  ஒன்றிரண்டு பாடல்களுக்காக, ஒரு வேளைச் சாப்பாட்டுக்கு முழு ஓட்டலையே வாங்கியது போல, பத்தாயிரம் கொடுத்து வாங்கினாராம்.  சரிப்பா.  ஒன்றிரண்டு பாடல்கள் தேவைப்பட்டன.  வாங்கினீர்கள்.  அத்தனைப் பாடல்களையும் வாங்கினீர்கள்.   அவற்றிலிருந்து லாபமே கிடைக்கவில்லையா?  லாபம் கிடைக்காது என்றால் தேவையில்லாமல் அத்தனைப் பாடல்களின் உரிமையையும் வாங்கியிருப்பீர்களா?  அதுவும் கதைக்கே மூவாயிரம்.  இரண்டு பாடல்களுக்குப் பத்தாயிரம் என்ற விதத்தில்?

சாதுவைப் போல “பாரதியார் பாடல்களை நாட்டுடமையாக்க வேண்டுமென்ற முயற்சி எடுத்தது அவ்வை டி. கே. சண்முகமாக இருந்திருக்கலாம்.  ஓமந்தூராரை விட்டு ‘நீங்கள் கேளுங்கள்.  கொடுத்துவிடுவார்’ என்று சொல்லியும் இருக்கலாம்” என்று ஒன்றுமே தெரியாதது போல் சொல்கிறார்.  ஒளவை சண்முகம் சகோதர்கள் பில்ஹணன் என்றொரு திரைப்படத்தை எடுத்தார்கள்.  அந்தத் திரைப்படமே பாரதி எழுத்து விடுதலை அடைந்து நம் கைகளில் தாரளமாக நடமாட வழி வகுத்தது.  அதை அடுத்ததாகப்  பார்ப்போம்.

License

Share This Book